மாற்றுத்திறனாளியின் மகத்தான சாதனை – மத்திய அரசின் விருது பெறும் மதுரை வீரர்!

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரராக இருந்து, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வென்றதுடன், பயிற்சியாளராக, நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளி வீரர்களை உருவாக்கியுள்ளார் மதுரையை சேர்ந்த ரஞ்சித்குமார். இந்திய தேசத்திற்காக 26 முறை உலகளவில் பங்கேற்று, குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று, இந்தியாவிற்கும், நம் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர் தான் இந்த ரஞ்சித்குமார். மதுரை, கடச்சநேந்தல் பகுதியை சேர்ந்த இவர், மனைவி குழந்தைகளுடன் ரம்மியமான சூழலில் வாழ்ந்து வருகிறார். தேசிய அளவில் மாற்றுதிறனாளி சாதனையாளராக திகழும் ரஞ்சித்குமார், இதுவரை சர்வதேச அளவில் 22 பதக்கங்களையும், தேசிய அளவில் 48 தங்கப்பதக்கங்கள் வென்றிருக்கிறார். கடந்த 2014-ஆம் ஆண்டோடு ஓய்வு பெற்றாலும், தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் பயிற்சியாளராக பொறுப்பேற்று, தேசிய அளவில் தகுதிக்குரிய 400 மாணவர்களையும், சர்வதேச அளவில் தகுதிக்குரிய100 மாணவர்களையும் உருவாக்கியிருப்பதாகப் பெருமிதத்துடன் கூறுகிறார் ரஞ்சித்குமார். கடந்த 2013-ஆம் ஆண்டு தேசிய அளவில் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை, அன்றைய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றதாகவும், வருகின்ற ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்வில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தயான் சந்த் விருதைப் பெறவிருக்கும் தருணம், தன் வாழ்வின் முக்கிய தருணம் என்பதை, ரஞ்சித்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். வருகின்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை படைக்கும் 10 தமிழக வீரர்களை உருவாக்கி, தமிழகத்திற்கு நிச்சயம் பெருமை தேடித் தர முடியும் என நம்பிக்கையோடு இருகிறார் ரஞ்சித்குமார்.

Exit mobile version