மதுரை அழகர்கோயிலில், அமைக்கப்பட்டிருந்த செயற்கை வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி, கள்ளழகர் இறங்கும் வைபவம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர் கோயில், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
உலகப் பிரசித்தி பெற்ற இந்த கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 23ம் தேதி விமரிசையாக தொடங்கியது.
கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்ததால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் உள்ளிட்ட திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் கோயில் வளாகத்திலேயே நடைபெற்றன.
கோயிலில் உள்ள பிரகாரத்திலேயே ஆகம விதிகளின்படி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கள்ளழகர் திருக்கோலத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி பக்தர்கள் இல்லாமல் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது.
கோயில் ஆடி வீதி நந்தவனத்தில் ஏற்படுத்தப்பட்ட செயற்கை வைகை ஆற்றில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகருக்கு சாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் உற்சவத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், நிகழ்ச்சிகள் அனைத்தும் யூடியூபில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.