சீர்மிகு நகர்த்திட்டத்தின் கீழ் பொலிவு பெறும் மதுரை மாநகரம்

சீர்மிகு நகர்த்திட்டத்தின் கீழ் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை வீதிகள் மற்றும் திருமலை நாயகர் மஹால் ஆகியவை வண்ண கற்களால் அழகுப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூங்கா நகரம் என அழைக்கப்படும் மதுரை பொலிவுறும் நகரமாக மாறி வருகிறது. மேம்பாலம் மற்றும் நகர்புற வளர்ச்சிப் பணிகள், பேருந்து நிலையங்கள் சீரமைப்பு, வைகை நதி சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சீர்மிகு நகர்த்திட்டத்தின் கீழ் புராதன சின்னங்களை மேம்படுத்தும் பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தற்போது அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் அழகுப்படுத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. மார்பிள் வகையைச் சேர்ந்த கோப்பில் வகை கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது வரவேற்கத்தக்க ஒன்று என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையை சுற்றிலும் அழகிய வண்ணக் கற்கள் பதிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளன.

ஏற்கனவே மதுரை ஆரப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு காளையை தழுவுதல் போன்ற ஒரு சிலையும், பாத்திமா கல்லூரி அருகில் சித்திரை தேர் போன்ற ஒரு சிலையும் பழங்காநத்தம் ரவுண்டானா அருகே திருமலை நாயக்கர் தர்பார் இருக்கை போன்ற ஒரு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், அதிக வெப்பம் தாக்காமல் மக்கள் நடந்தே சுற்றிப் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version