கொரோனா தடுப்பு பணிகளில் மதுரை மாநகராட்சி மிகுந்த மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதிமுக ஆட்சிக்காலத்தை போல தற்போது மாவட்ட நிர்வாகம் துடிப்புடன் இயங்குவதில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.
மதுரையில் நாளொன்றுக்கு ஆயிரத்து 400க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியதால், மக்கள் ஒவ்வொரு நாளையும் அச்சத்துடன் கழித்து வருகின்றனர். மாநகராட்சியின் நோய்த்தடுப்பு பணிகள் வீரியமாக இல்லை என்பதே மக்கள் அச்சத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. நூறு வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில், கிருமிநாசினிகள் கூட தெளிக்கப்படுவதில்லை என மக்கள் புலம்புகின்றனர்.
பொதுவெளிகளில் முகக்கவசம் அணியாமல், பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றாமல் செல்வோர் மீது காவல்துறையோ, மாநகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மக்களுக்கு கபசுர குடிநீர், மாத்திரைகள் எதுவும் வழங்குவதில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த முறை அதிமுக ஆட்சியில் வீடு தேடி உணவும், சமையல் பொருட்களும் வழங்கப்பட்டதாக கூறும் பொதுமக்கள் தற்போது யாருமே கண்டுகொள்ளாதது கவலை அளிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டில் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நேரடியாக வந்து கள ஆய்வு செய்து குறைகளை தீர்த்து வைத்ததாக கூறும் மக்கள், தற்போது திமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டிக்கூட பார்க்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.