மதுரை தினகரன் நாளிதழ் எரிக்கப்பட்ட வழக்கு : கடந்து வந்த பாதை…

மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மு.க.அழகிரி ஆதரவாளர்கள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட இந்த வழக்கு, கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்…

2007ல் சன் தொலைக்காட்சியானது ஏ.சி. நீல்சன் நிறுவனத்தின் தொடர் கருத்துக் கணிப்புகளை தனக்கு ஏற்றபடி வெளியிட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக, ’தி. மு. க. தலைவரின் வாரிசாக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்ற பெயரிலும் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது.

அந்தக் கருத்துக்கணிப்பில் ஸ்டாலினை 70% பேர் ஆதரிப்பதாகவும், அழகிரிக்கு வெறும் 2% ஆதரவு உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்தக் கருத்துக் கணிப்பு அழகிரி ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பையும், திமுகவுக்குள் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் 2007 மே 9அன்று அழகிரியின் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் குறிப்பாக கமுதி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர் , தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, கற்களை வீசி, ஏழு பேருந்துகளுக்கு தீ வைத்தனர்.

சன் குழுமத்தைச் சார்ந்த தினகரன் பத்திரிகை, சன் தொலைக்காட்சி மற்றும் தமிழ் முரசு பத்திரிகை ஆகியவற்றின் அலுவலகங்கள் மீது அங்கு கூடிய குழு ஒன்று காவல் துறையினரின் முன்னிலையில் கற்களை வீசியது. இந்த அராஜகங்களை திமுக அரசு தட்டிக் கேட்காததால், வன்முறையின் உச்சகட்டமாக பெட்ரோல் குண்டு வீசி மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டது. இதில் தினகரன் ஊழியர் முத்துராமலிங்கம், கோபி, வினோத் ஆகியோர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர் .

அப்போது சன் டிவியும், தினகரன் நாளிதழும், ’அழகிரியின் ரவுடிகள் நடத்திய வெறியாட்டம்’ என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன. இந்த குற்றம் தொடர்பாக திமுக தொண்டர் அணி அமைப்பாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதனால் அப்போதைய திமுக அரசு பின்னர் சிபிஐயிடம் வழக்கை ஒப்படைத்தது. விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், 17 பேர் மீது குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தனர். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரையும் மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது.

ஆனால் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் அரசுத் தரப்பு இருந்ததால், கடும் கண்டனங்கள் எழவே, 2010 ஆம் ஆண்டு 118 நாள் தாமதத்திற்குப் பின்னர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ மேல் முறையீடு செய்தது.

Exit mobile version