மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு 2 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான பாண்டியராஜா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிதி ஒதுக்கீடு குறித்தும், மாணவர் சேர்க்கை குறித்தும் மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளிக்க கோரியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்கு நிதியுதவி வழங்க உள்ள ஜப்பானின் ஜிக்கா நிறுவன அதிகாரிகளுடன் கடந்த 24ம் தேதி ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளது.
மேலும், நிதியுதவி வழங்குவதற்கான ஒப்பந்தம் வரும் மார்ச் மாதத்தில் கையெழுத்தாகும் என விளக்கம் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் சேர்க்கை குறித்து தெரியவரும் என்றும் பதிலளித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் இந்த விளக்கத்தின் மூலம் மொத்த திட்ட மதிப்பீடு 2 ஆயிரம் கோடி ரூபாய் என்பதும், அதில் 85 சதவீதம் ஜிக்கா நிறுவனம் வழங்க உள்ளதும் தெரியவந்துள்ளது.