உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனம், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 77.
சுவாச கோளாறு காரணமாக கடந்த 9ம் தேதி, மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணகிரிநாதருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சிகிச்சை பலனின்றி காலமானார். மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார். அரசியல், சமூக கருத்துகளை தயக்கமின்றி முன்வைத்து வந்தவர் மதுரை ஆதீனம் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு செய்தியறிந்து மனவேதனை அடைந்ததாக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது இரங்கள் குறிப்பில், அருணகிரிநாதர் ஆன்மீக பெரியவர், பக்திமான், சமூக சிந்தனையாளர் என புகழாரம் சூட்டியுள்ளார். மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் இழப்பு தமிழுலகின் பேரிழப்பாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.