சென்னையில் மதராசபட்டினம் விருந்து என்கிற பெயரில் 3 நாட்களாக நடைபெற்று வரும் உணவுத் திருவிழா மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை தீவுத்திடலில் “மதராசபட்டினம் விருந்து” என்ற பெயரில் தமிழரின் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை, உணவுப் பாதுகாப்புத் துறை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் ஏராளமான பொதுமக்களும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் உணவுத் திருவிழாவுக்கு வந்து சுவையான உணவுகளை ருசித்து செல்கின்றனர். எத்தகைய உணவுகளை எப்போது உண்பது போன்ற விளக்கத்தையும் இங்குள்ள அரங்குகளில் கேட்டுச் செல்கின்றனர். தமிழ்நாட்டு உணவு வகைகள் மிகவும் சுவையாகவும் இனிமையாகவும் உள்ளதாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.
அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், கடம்பூர் ராஜு ஆகியோரும் நடிகர் விவேக்கும் உணவுத் திருவிழாவில், பாரம்பரிய உணவை சாப்பிட்டு, ருசிபார்த்தனர். அப்போது பேசிய நடிகர் விவேக், ஆயிரக்கணக்கான உணவு வகைகள் இருக்கும் போது நாம் நெல்லரிசிச் சோற்றை மட்டுமே உண்டுவருவதாகத் தெரிவித்தார். கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி ஆகிய சிறுதானியங்களால் ஆன உணவில் அனைத்துச் சத்துக்களும் அடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
உணவுத் திருவிழாவுக்கு வருவோரின் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் வகையில் தமிழரின் பாரம்பரியக் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த உணவுத் திருவிழாவிற்கு மக்களிடம் பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்ற உணவுத் திருவிழாக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் மக்களுக்குச் சிறந்த பொழுதுபோக்காகவும், உடல்நலன் காக்க விழிப்புணர்வூட்டும் நிகழ்வாகவும் உள்ள உணவுத் திருவிழா அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதனால் தமிழரின் பாரம்பரிய உணவுப் பண்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று தெரிவித்தார்.