மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான வசதிகளும், கழிப்பறை வசதிகளும் இல்லாமல் எந்த அரசு கட்டடங்களும் கட்டக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு கட்டிடங்களில், மாற்றுத் திறனாளிகள் எளிதில் சென்று வரும் வகையில் பாதை அமைக்கவும், கழிப்பறைகளை அமைக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 32 மாவட்டங்களில் அரசு கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாநிலம் முழுவதும் உள்ள அரசு கட்டிடங்கள், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் உள்ளதா என்பது குறித்த விவரங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினர். இதையடுத்து அனைத்து அரசு கட்டிடங்களும், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இரண்டு மாதங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.