திமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்குவதில், ஆளுங்கட்சியினர் கலந்து கொண்டதை ஏற்க முடியாது என, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கொரோனா நிவாரண நிதியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் திமுக நிர்வாகிகள் ரேஷன் கடைகளை ஆக்கிரமித்துக் கொண்டு, ஆளுங்கட்சியினரையும் கூட்டம் கூட்டமாக அழைத்துச் சென்று நிவாரண தொகையை வழங்குவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், கொரோனா நிதி வழங்குவதில் ஆளுங்கட்சியினர் பங்கேற்பதோ, கட்சியின் கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை எந்த வகையிலும் பயன்படுத்தவோ கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த வியாழன் அன்று விசாரணைக்கு வந்த போது, அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளிக்க அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை வழக்கறிஞரின் விளக்கங்களை கேட்ட நீதிபதிகள், நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில், ஆளுங்கட்சியினர் கலந்து கொண்டதை ஏற்க முடியாது என தெரிவித்தனர். கொரோனா விதிமுறைகளை திமுகவினர் கடைபிடிக்காதது கண்டனத்திற்குரியது எனவும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

Exit mobile version