தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதற்கட்ட தகுதி தேர்வு நடைபெற்றது. இதன் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு வரும் 12ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. இந்த நிலையில் முதற்கட்ட தகுதி தேர்வில் தோல்வியுற்ற விக்னேஷ் என்பவர் தவறான கேள்விகள் தொடர்பாக திருத்திய விடைத்தாள் பட்டியலை வெளியிட கோரியும் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.
வழக்கு விசாரணையின் போது இந்த விவகாரத்தில் 27 நிபுணர்களை கொண்டு தவறான கேள்விகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் விக்னேஷ் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும் தேர்வாணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
6 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட பின்னரும் புகார்தாரர் விக்னேஷ், தேர்ச்சி பெறவில்லை எனவும் விளக்கம் தரப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தேர்வாணையத்தின் வாதத்தை ஏற்று மாணவர் விக்னேஷின் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி பார்த்திபன் உத்தரவிட்டார்.