ஆபாசமாக பேசியே பல கோடி சொத்துகளை சம்பாதித்த மதன்

யூ-டியூபர் மதனை தனிப்படை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், மதனின் மனைவி கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டு போட்டியான PUBG கேமை விளையாடி யூ-டியூப்பில் நேரலை செய்வதை மதன் என்பவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

அப்போது, பெண்களை இழிவாக பேசிய மதன் மீது, புகார்கள் குவிந்தன. இதுகுறித்து புளியந்தோப்பு காவல்நிலையத்தில் ஆஜராக மதனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார்.

மதனை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், மதனின் தந்தை மாணிக்கம் மற்றும் மனைவி கிருத்திகாவிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மதனின் யூ-டியூப் சேனலுக்கு கிருத்திகா அட்மினாக இருந்ததோடு, வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, மதனுக்கு உடந்தையாக இருந்த கிருத்திகாவை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து, வருகிற 30ம் தேதி வரை கிருத்திகாவை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு பல கோடி சொத்துகளை யூ டியூபர் மதன் குவித்திருப்பது, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யூ டியூபர் மதன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது யூடியூப் சேனலுக்கு அட்மினாக செயல்பட்ட அவரது மனைவி கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருத்திகாவிடம் நடத்திய விசாரணையில், ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு பல கோடி சொத்துகளை மதன் குவித்திருப்பது தெரியவந்தது. வீடியோ மூலம் மாதந்தோறும் 7 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி வந்ததும் அம்பலமானது.

பப்ஜி வீடியோ வெளியிட்டு சம்பாதித்த பணத்தில் மட்டும், இரண்டு சொகுசுக் கார்கள், இரண்டு சொகுசு பங்களாவை மதன் வாங்கியிருப்பதும், செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில், அருகருகே இரண்டு சொகுசு வீடுகளை கட்டி ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும், விசாரணையில் தெரியவந்துள்ளது.

https://youtu.be/VQ4nzMQLdEY 

இதனிடையே, யூ-டியூபர் மதனின் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர்.

மதனின் சேனலை முடக்க ஏற்கனவே புளியந்தோப்பு காவல்துறையினர் பரிந்துரைத்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரும் எழுதியுள்ள கடிதத்தில் ஆபாசமாக பேசி வீடியோக்களை பதிவேற்றம் செய்து பல கோடி சொத்துகளை மதன் குவித்திருப்பதால் அவரது சேனலை முடக்க வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரது சேனலில் உள்ள மிகவும் ஆபாசமாக பேசி பதிவிடப்பட்டிருந்த 15 வீடியோக்களை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version