சிம்புவின் மாநாடு திரை விமர்சனம்

‘மாநாடு’

தயாரிப்பு – சுரேஷ் காமாட்சி
இயக்கம் – வெங்கட் பிரபு
இசை – யுவன் சங்கர் ராஜா
எடிட்டிங் – கே.எல். பிரவீன்
ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம். நாதன்
நடிகர்கள் – சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன்,
எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன், மனோஜ்

 

‘மாநாடு’ விமர்சனம்…

டைம் லூப் (Time Loop) எனப்படும் ஒரே காலத்தில் தங்கிவிடுவது என்ற சயின்ஸ்பிக்ஸன் (Science Fiction) கதைக்களத்தில் உருவாகியுள்ளது ‘மாநாடு’.

துபாயில் இருந்து நண்பனின் காதல் திருமணத்தை நடத்திவைப்பதற்காக கோவை வரும் அப்துல் காலிக் (சிம்பு), முதலமைச்சரை (எஸ்.ஏ. சந்திரசேகர்) கொலை செய்ய அமைச்சர் ஒருவரால் (ஒய்.ஜி. மகேந்திரன்) போடப்படும் திட்டத்தை முறியடிக்கிறார்.

ஒரேவரியில் இந்தக் கதையை கூறுவது மிக எளிது, ஆனால் இதனை டைம் லூப் பின்னணியில் திரைக்கதையாக சொல்லியிருப்பது தான் வியக்க வைக்கிறது.

ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு மட்டுமே புரியும் டைம் லூப் கதைக்களத்தை, தமிழில் ரசிகர்களுக்கு எப்படி கூற வேண்டும் என மிரட்டியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

ஒரேநாளில் நிகழும் கதையை திரும்ப திரும்ப நடக்கும் ஒரே மாதிரியான காட்சிகளோடு விறுவிறுப்பாக ரசிக்கும்படி திரையில் கொண்டுவருவது அவ்வளவு சுலபமானதல்ல. அதனை இயக்குநர் வெங்கட் பிரபுவும் அவரது குழுவினரும் அசாத்தியமாக செய்து முடித்துள்ளனர்.

அப்துல் காலிக்காக சிம்பு, தனுஷ்கோடி என்ற போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே. சூர்யா, இவர்கள் இருவரும் தான் இப்படத்தின் ஆத்ம பலம்.

கே.எல். பிரவீனின் எடிட்டிங் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது,

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை உருவமாக அமைந்துள்ளது.

முதல் பாதியில் சிம்பு வெளுத்து வாங்குகிறார், இரண்டாம் பாதியில் எஸ்.ஜே. சூர்யா மிரள வைக்கிறார். அவரின் அசுரத்தனமான நடிப்பும் “தலைவரே… தலைவரே…”, “வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு” போன்ற வசனங்கள் பேசும் இடங்களும் தெறி மாஸ்.

குறிப்பாக சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி. மகேந்திரன் மூவருக்கும் இடையில் நடக்கும் ஒருகாட்சி ரசிகர்களை அசரடிக்கிறது.

சிம்பு அடக்கி வாசித்திருப்பது அவரது பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது, சண்டைக் காட்சிகளில் சூப்பர் எனர்ஜி. காதல், குத்து பாட்டு, பஞ்ச் வசனங்கள் இவைகள் எதுவும் இல்லாமல், சிம்புவிற்கு இந்தப் படம் புதிய பாதையை வகுத்துள்ளது.

எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்புக்கு தனுஷ்கோடி பாத்திரம் வேறலெவல் வரவேற்பை கொடுத்துள்ளது.

இருவருமே ஆடுபுலி ஆட்டம் ஆடியிருக்கிறார்கள்…

திருமண மண்டபத்தில் நடக்கும் சண்டைக் காட்சியும், இரண்டாம் பாதியில் எஸ்.ஜே. சூர்யா டைம் லூப்பை கண்டுபிடிப்பதும் ரசிகர்களிடம் திரைக்கதையின் போக்கை புரியவைக்கிறது.

இந்தப் பெருமையும் படத்தின் மொத்த பலமும் கே.எல். பிரவீனின் எடிட்டிங் தான், கொஞ்சம்கூட பிசிறு தட்டவில்லை. யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவும் நிறைவான பங்களிப்பைச் செய்துள்ளது.

அப்துல் காலிக் என்ற சிம்பு பாத்திரம் மூலம், முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் பின்னணியையும் அதன் விளைவுகளையும் மாநாடு இயல்பாக பதிவு செய்துள்ளது.

படத்தின் மொத்த கதைக்களமும் கோவையில் தான் நடக்கிறது. பாபர் மசூதி இடிப்பு, கோவை கலவரம் என உண்மைச் சம்பவங்களை படத்திற்குத் தேவையான வகையில் தொடர்புப்படுத்தியுள்ளது சிறப்பு.

அப்துல் காலிக் என்ற சிம்புவின் பாத்திரமும், அவரையே இஸ்லாமிய வெறுப்பு அரசியல், தீவிரவாதத்திற்கு எதிரான வசனங்களை பேச வைத்திருப்பதும் பிரசாரத்தன்மையில் இருந்து படத்தை விலகிச்செல்ல வைத்துள்ளது. அதேசமயம் தீவிர இந்து அடையாளங்களோடு படத்தில் வரும் வாகை சந்திரசேகர் பாத்திரத்தை நேர்மறையாக காட்டியிருப்பதும் வரவேற்க வேண்டியது.

“அமெரிக்கால ஒருத்தன் துப்பாக்கிய எடுத்து சுட்டா, அவன சைக்கோன்னு சொல்றதும், அதையே ஒரு முஸ்லீம் செஞ்சிட்டா அவன தீவிரவாதின்னு அடையாளப்படுத்துறதும் என்ன நியாயம்ன்னு” சிம்பு கேட்பது, முஸ்லிம்கள் மீது தொடுக்கப்படும் உளவியல் ரீதியான தாக்குதல்களை அனைவரும் புரிந்துகொள்ள வகை செய்கிறது.

அதேபோல் முஸ்லீம் மணமகளை வேறு மத காதலனுடன் சேர்த்துவைக்க இரண்டு முஸ்லீம் இளைஞர்களே நட்புக்காக உதவுவதும், கலவரத்தை உருவாக்கும் கும்பலில் இரு மதங்களைச் சேர்ந்தவர்களும் இருப்பது என, சமவிகித கலப்புசெய்து திரைக்கதை நகர்ந்திருக்கிறது.

இன்னொரு பக்கம் சில இடங்களில் தமிழகத்தின் சமகால வாரிசு அரசியல், மதவாத அரசியல் போன்றவைகளையும் போகிறப் போக்கில் அடித்துச் செல்கிறது மாநாடு.

‘மாநாடு’ இரண்டாம் பாகம் உருவாகலாம் என்பதற்கான காட்சிகள் இறுதியில் வருவது எதிர்பார்க்க வைத்துள்ளது.

 

– அப்துல் ரஹ்மான்

Exit mobile version