“தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்” என்று வீர முழக்கமிட்டு சென்னையை தமிழ்நாட்டுக்காய் மீட்டுத் தந்த, எல்லைப் போராட்ட வீரரும், விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கை எடுத்துரைத்தவருமான, சிலம்புச் செல்வர் ம.பொ.சி யின் நினைவு நாள் இன்று.
சற்றே அவரின் வரலாற்றுப் பயணத்தை திரும்பிப் பார்ப்போம்.
தலைநகர் சென்னை என நாம் இன்று போற்றிக் கொண்டாடும் சென்னை ஒருநாள் நம்மை விட்டுச் செல்லும் நிலை வந்தபோது, பெரும் போராட்டங்களை நடத்தி சென்னையை தாய்த்தமிழகத்திற்கு மீட்டுத் தந்த தலைவர்தான் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் எனும் ம.பொ.சி.
வறுமையின் காரணமாக மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர், இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு பலமுறை சிறை சென்றார்.
சிறையில் தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்து தமிழ் புலமையை மேம்படுத்திக் கொண்டு பல்வேறு புத்தகங்களை தமிழ்ச் சமூகத்திற்காய் யாத்துத் தந்தார்.
1966இல் தான் எழுதிய “வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு” என்ற நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.
“விடுதலைப் போரில் தமிழகம்” என்னும் தனது நூலில் இந்திய விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய பங்கை எடுத்துரைத்தார்.
சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு” என பெயர் சூட்டுவதற்கு பல்வேறு போராட்டங்களை நடத்தி, பெயர் மாற்றத்திற்கு பெரிதும் காரணமாக இருந்தார்.
திருப்பதியும் திருத்தணியும் ஆந்திரர்களிடம் செல்ல இருந்த நிலையில், தனது வலுவான போராட்டங்களால் அதனை முடக்கினார்.
சிலப்பதிகாரத்தின் மீது ஆழ்ந்த பற்று கொண்டு அதனைப் பரப்ப “சிலப்பதிகார மாநாடுகளை” நடத்தினார். இதன் காரணமாக “சிலம்புச் செல்வர்” என்ற பட்டத்திற்கு உரியவரானார்.
தமிழக சட்டமன்ற மேலவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ம.பொ.சி , 1978 முதல் மேலவை கலைக்கப்பட்ட 1986 ஆம் ஆண்டு வரை அதன் தலைவராக சிறப்புடன் பணி செய்தார்.
தமிழ், தமிழர் நலன், தமிழ்நாடு , எனத் தன் இறுதி மூச்சுவரை தமிழனுக்காக போராடிய சிலம்புச் செல்வர், 1995 அக்டோபர் 3 ஆம் நாள் உடல் நலக்குறைவால் 89 வயதில் காலமானார்.
தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் ம.பொ.சியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
நியூஸ் ஜெ. செய்திகளுக்காக பாரதி கனகராஜ்