பிறந்து 27 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இளங்கோவன், கௌரி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்து 27 நாட்களே ஆன குழந்தைக்கு மூச்சு விடுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து குழந்தையின் நிலைமை மிகவும் மோசமான சூழ்நிலைக்கு செல்லவே புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் இடது பக்க நுரையீரல் பிறவி கோளாறால் இயங்கவில்லை என்பதை கண்டறிந்து, மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்தின் தலைமையில் குழு அமைத்து குழந்தைக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். பின்னர் குழந்தைக்கு இடதுபுற நுரையீரலின் மேல் பகுதியை அகற்றி இயற்கையான முறையில் சுவாசம் செய்யும் நிலைக்கு குழந்தையை மருத்துவர்கள் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளனர்.