மத்திய அரசின் மலிவு விலை மருந்தகங்களில், ஒரு ரூபாய்க்கு சானிடரி நாப்கின்கள் விற்பனை தொடங்கியுள்ளது, அது குறித்த செய்தி தொகுப்பு
பெண்களின் நலன் கருதி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது பெண்களுக்கு 1ரூபாய்க்கும் சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தினை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் ‘மக்கள் நல மருந்தகங்கள்’ எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்து வருகிறது. இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள், பிரபல நிறுவனங்களின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்படுகின்றன.
இதுதொடர்பாக மக்கள் நல மருந்தக உரிமையாளர்கள் கூறுகையில், ‘மக்கள் நல மருந்தகங்களில் மிக குறைந்த விலையில் சானிடரி நாப்கின் விற்க முடிவு செய்யப்பட்டு, நான்கு நாப்கின்கள் அடங்கிய பாக்கெட் ரூ.10-க்கு விற்கப்பட்டு வந்தது. ஒரு நாப்கின் ரூ.2.50-க்கு கிடைத்து வந்த நிலையில், ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 4 நாப்கின் கொண்ட பாக்கெட், ரூ.4-க்கு விற்கப்படுகிறது. இந்த நாப்கின், தற்போது ஒரு சில கடைகளுக்கு வந்துள்ளது. வரும் நாட்களில் அனைத்து மக்கள் நல மருந்தகங்களிலும் ரூ.1-க்கு கிடைக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய அரசின் மலிவு விலையில் நாப்கின் வழங்கும் இந்த திட்டத்திற்கு பலரும் பராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.