வங்கக் கடலில் உருவாகி 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த புரெவி புயல், தற்போது வேகம் குறைந்து, 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
புரெவி புயல் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து, மாலை 5 மணி நிலவரப்படி திரிகோணமலைக்கு 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது. மேலும், பாம்பனுக்கு 330 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு 520 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது மேலும் வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, திரிகோண மலைக்கு வடக்கே, இரவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது, 100 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புரெவி புயல், வியாழக்கிழமை குமரிக்கடல் நோக்கி நகர்ந்து, 3 ஆம் தேதி பிற்பகலில் பாம்பன் பகுதியை நெருங்கி, 4 ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.