69 வயதிலும் தமிழ் மீது தீராக் காதல்!

தொன்மைத் தமிழ் எழுத்துக்களை, இளம் தலைமுறை மாணவர்களும் கற்றுத் தெளியும் வகையில், தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சி புத்தகத்தை எழுதி வருகிறார் 69 வயது அநுபமா ஸ்ரீனிவாசன். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான அவரது தமிழ் ஆர்வம் குறித்த செய்தி தொகுப்பை தற்போது காண்போம்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்துள்ள சோழனூரில் வசித்து வருகிறார் அநுபமா ஸ்ரீனிவாசன். ஓய்வு பெற்ற கருவூலத்துறை கணக்கரான இவர், பல்வேறு சிறுகதைகளை வார இதழ்களுக்கு எழுதியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வேலுநாச்சியார் உள்ளிட்ட16 புத்தகங்களை எழுதியுள்ளதோடு, அவ்வையாரின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நாழ்வழி, மூதுரை மற்றும் அப்துல்கலாமின் அக்னிச் சிறகுகளையும் எளிய ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

தமிழ் மீதான ஆர்வத்தால், தமிழ் எழுத்துக்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். எல்லோரையும் கவரும் வகையில் தமிழ் எழுத்துக்களை கோல வடிவிலும் எழுதி வைத்துள்ளார். பல்வேறு கோயில்களின் கல்வெட்டுகளில் இருந்த தமிழ் எழுத்துக்களை ஆய்வு மேற்கொண்ட அவர், கிமு 3ஆம் நூற்றாண்டு முதல் கிபி 19ஆம் நூற்றாண்டு வரை தமிழ் எழுத்துக்கள் மாற்றம் அடைந்தது குறித்தும், பிராமி எழுத்துக்கள், வட்டெழுத்துக்கள், கிரந்த எழுத்துக்களின் வடிவத்தை புத்தகமாக எழுதி வெளியிடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

தொன்மையான தமிழ் எழுத்துக்களை இன்றைய மாணவர்களும் புரிந்து கொள்ளும் பாடத்திட்டத்தை சேர்க்கவும், தமிழக அரசுக்கு அநுபமா ஸ்ரீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். 69வயதிலும் தமிழின் தொன்மையை அனைவரும் அறிவதற்காக, அநுபமா ஸ்ரீனிவாசன் மேற்கொண்டுள்ள முயற்சி வெற்றியடையட்டும்!

Exit mobile version