"சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை நேசியுங்கள்"-நடிகை லிசா ரே

‘உங்கள் சருமத்தையும், அதன் சுருக்கங்கள் சொல்லும் கதைகளையும் நேசியுங்கள்’ எனப் பிரபல மாடல் நடிகை லிசா ரே கூறியுள்ளார்… யார் இந்த லிசாரே. 1972 ஆம் ஆண்டில் பிறந்த லிசாரே ஒரு கனடிய நடிகை மற்றும் முன்னாள் ஆடை அலங்கார மாடல் ஆவார். இவர் தமிழில் சரத்குமாருடன் இணைந்து `நேதாஜி’ படத்தில் நடித்ததன் மூலம் தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் லிசாரே.

47 வயதாகும் லிசாரே close to the bone என்ற புத்தகத்தை இந்த ஆண்டு வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தன் வாழ்க்கைக் கதை பற்றிப் பதிவிட்டிருந்தார். கேன்சரால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இதனை அறிந்த ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

2009 ஆம் ஆண்டு, வெள்ளை அணுக்களைப் பாதிக்கும் அரிய வகை புற்றுநோயால் லிசா பாதிக்கப்பட்டார். பிறகு ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளான்ட் சிகிச்சை மேற்கொண்டுவந்தார் லிசா. இதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு, புற்றுநோய்ப் பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டுவிட்டதாக அறிவித்தார்.வயதும் நோயும் தன் சருமத்தை மங்கச் செய்திருந்தாலும், அதை பாசிட்டிவ்வாக அணுகுகிறேன் என லிசா ரே தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் பில்டர் எதுவும் போடாத சாதாரணமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து லிசாரே கூறுகையில், இப்போது எனக்கு 47 வயது. தற்போது நான் ஒப்பனைகள் எதுவும் செய்யாத புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கிறேன். நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மைப் பார்க்கும் தைரியம் நம்மிடம் இருக்கிறதா? இளம்வயதில், என்னிடம் அந்தத் தைரியம் இல்லை. இப்போது நான் மாறியிருக்கிறேன்.

அனைவரும் உங்கள் மதிப்பை அங்கீகரிக்கப் போவதில்லை. உங்கள் சருமத்தையும் அதன் சுருக்கங்கள் சொல்லும் கதைகளையும் நீங்கள் நேசியுங்கள்; உங்கள் அனுபவங்களையும், அதன் சாரங்களையும், உங்கள் மதிப்பையும் நீங்கள் உணருங்கள் பெண்களே! அப்போது, உங்கள் பிரகாசத்தை இந்த உலகம் பிரதிபலிக்கும். உலகம் சொல்லவில்லை என்றாலும்கூட, நீங்கள் நேசிப்புக்குரியவர்கள், நேர்த்தியானவர்கள்!’… லிசாவின் இந்த போஸ்ட்டை பல பாலிவுட் பிரபலங்களும், அவரின் ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள். ‘அகத்திலும் புறத்திலும் எப்போதும் நீங்கள் அழகு’ என, பாசிட்டிவிட்டி கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version