காதலைச் சொன்ன சில வாரங்களிலேயே சிறைக்குப் போன காதலனுக்காகச் சிறையில் உள்ள வீட்டில் வாழ்ந்து வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கை இணைய உலகில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த நினா என்ற 16 வயது இளம்பெண் 2006ஆம் ஆண்டில் 17 வயதுள்ள மைக்கேல் என்பவருடன் காதல் வயப்பட்டார். அவர்கள் காதலைப் பரிமாறிக் கொண்ட சில வாரங்களிலேயே ஒரு கொள்ளை வழக்கில் ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபட்டதாக மைக்கேல் கைதானார். அவருக்கு நீதிமன்றத்தில் 23 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
மைக்கேல் சிறையில் இருந்த போதும் நினா அவருக்கு 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்தார். பின்னர் 2012ஆம் ஆண்டு முதல் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொள்ளத் தொடங்கினர். அவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். இருவரின் திருமணத்திற்கு ஒப்புதல் வழங்கிய கலிபோர்னியா சிறைத்துறை, இருவரும் ஒரு மாதத்திற்கு 48 மணி நேரம் சந்திக்க அனுமதியும் வழங்கியது. இவர்களது சந்திப்புக்காகச் சிறை வளாகத்தில் வீடு ஒன்றும் ஒதுக்கப்பட்டது.
இந்தத் தம்பதிகள் 2017ஆம் ஆண்டு சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சிறை வீட்டில் தனது கணவர் மைக்கேலைச் சந்திக்கும் நேரங்களில் நினா எடுத்த புகைப்படங்கள்தான் இந்தக் காதல் தம்பதிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தின. தற்போது உடற்பயிற்சி ஆலோசகராக உள்ள நினா, இந்தப் படங்களைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.
கலிபோர்னியா மாகாணச் சட்டங்களின்படி, 15 ஆண்டுகளைச் சிறையில் கழித்த இளம் கைதிகளுக்கு 3 மாதம் வரையில் பரோல் கிடைக்கும், அதுவரையில் பரோல் கிடையாது. அந்த 15 ஆண்டுகளை மைக்கேல் நிறைவு செய்ய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளதால் அதற்காகக் காத்திருக்கிறார் நினா. இப்போது 30 வயதைத் தொட்டுள்ள மைக்கேல், தனது 40 வயதுவரை சிறை, சிறையில் உள்ள வீடு, பரோல் – என்றுதான் தனது வாழ்க்கையைக் கழிக்க வேண்டும்.
மைக்கேலின் இந்த வாழ்க்கை, இளம் வயதில் எதிர்காலத்தைப் பற்றி எண்ணாமல் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், நினாவின் காதல் உண்மையான அன்புக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது. இதயத்தில் மலர்ந்த இவர்களது காதலை இன்று இணைய உலகம் கொண்டாடி வருகிறது.