இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலம் கடந்த வெள்ளியன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அப்போது இதனைப் பார்த்த ஆஸ்திரேலிய மக்கள் அதை வேற்றுகிரகத்தில் இருந்து வந்த பறக்கும் தட்டு என்று எண்ணிய சுவாரசிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்…
இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டபோது மேக மூட்டத்தினால் நம்மால் கூட தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் பறந்தது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ளவர்களுக்கு சற்று தெளிவில்லாமல் தெரிந்து உள்ளது.
சந்திரயான் 2 ஏவப்பட்டது குறித்து ஆஸ்திரேலிய மக்களில் பெரும்பாலானோருக்கு தெரியாத நிலையில், மேகங்களின் இடையே நெருப்பைக் கக்கிக் கொண்டு சென்ற சந்திரயான் 2 விண்கலனை மக்களில் சிலர் வேற்றுகிரகத்தில் இருந்து வந்த பறக்கும் தட்டு என நினைத்துக் கொண்டனர்.
உடனே தங்கள் கைபேசிகளிலும், கேமராக்களிலும் சந்திரயான் 2 விண்கலத்தை படம் பிடித்துக் கொண்ட ஆஸ்திரேலிய மக்கள் சமூக வலைத்தளங்களில் அவற்றை வெளியிட்டதுடன், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றையும் அழைத்து இது குறித்து பேசி உள்ளனர்.
இப்படியாக திடீரென ஏற்பட்ட பறக்கும் தட்டு புரளியால் குயின்ஸ்லாந்து மாகாணமே அல்லோலகல்லோலப் பட்டுள்ளது. பின்னர் அறிவியலாளர்கள் சந்திரயான் 2 விண்கலனை தொலைநோக்கியில் பார்த்து விளக்கிய பின்னரே குயின்ஸ்லாந்தில் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
இந்த சம்பவத்தினால் சந்திரயான் 2 விண்கலம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஆஸ்திரேலியாவுக்கும் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது.