அறந்தாங்கி அருகே அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை வட்டாட்சியர் சூரியபிரபு பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த கோங்குடி அத்தானி பகுதிகளில் தெற்கு வெள்ளாற்றில் தொடர் மணல் திருட்டு நடைபெறுவதாக வட்டாட்சியர் சூரியபிரபு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தெற்கு வெள்ளாற்று பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்த முயற்சி செய்தனர்.
இந்தநிலையில் லாரி ஓட்டுனர் தப்பி சென்ற நிலையில், லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில், புதுப்பட்டியை சேர்ந்த பெரியகருப்பன் என்பவருக்கு சொந்தமான லாரி என்பதும், அனுமதியின்றி மணல் கடத்தி விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதனையடுத்து, வட்டாட்சியர் மணல் மற்றும் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.