சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து தற்போது கால்நடை மருத்துவர் ஆகி பல பெண்களுக்கு உதாரணமாக விளங்குகிறார் ஆனந்தி.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி. இவருக்கு வயது 25. சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் ரோகித் அவர்களிடமிருந்து கால்நடை மருத்துவத் துறையில் 18 பதக்கங்களை பெற்று உள்ளார்.
சிறு வயதிலிருந்தே நன்றாக படிப்பவர் ஆனந்தி.ஆனால் அவரது தந்தை லாரி ஓட்டுனர் என்பதால் மாதத்திற்கு 5000 மட்டுமே வருமானம் வரும், அதனால் ஆனந்தியால் டியூஷன் கூட செல்ல வசதியில்லை.குடும்பத்தின் சூழ்நிலையை உணர்ந்த ஆனந்தி பள்ளியிலேயே படிப்பதில் கவனம் செலுத்தி 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் வந்துள்ளார்.
தான் நன்றாகப் படித்து மற்றவர்களுக்கு உதவ உதவ வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்துள்ளார்.
ஆம். ஆனந்தியின் வீட்டில் ஆடு மற்றும் கோழி வளர்த்துள்ளனர். அவற்றிற்கு நோய்வாய்ப்படும் போது கால்நடை மருத்துவரை அவர்களால் அணுக முடியவில்லை எனவே, தான் ஒரு கால்நடை மருத்துவர் ஆகி விலங்குகளுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
ஆனால் குடும்ப சூழ்நிலையால் 2012 ஆம் ஆண்டு 18 வயதில் ஆனந்திக்கு திருமணமாகி உள்ளது. பின்பு 2013 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் கனவை நோக்கி ஓடுவதில் ஒருபோதும் ஓயவில்லை ஆனந்தி.
மேலும் ஆனந்தியின் கணவரும் இவரின் படிப்பிற்கு பக்கபலமாக இருந்துள்ளார். 2014 ஆம் ஆண்டு தஞ்சாவூர் கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து தனது படிப்பை தொடங்கியுள்ளார். குழந்தை இருக்கும் போது எப்படி படிப்பது என்று ஆனந்தியின் உறவினர்கள் தாறுமாறாக பேசினாலும் இவரின் மாமியார் மற்றும் கணவர் ஆனந்திக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
திருமணமாகி ஒரு குழந்தை பெற்ற பிறகும் கூட கால்நடை மருத்துவத் துறையில் 18 பதக்கங்களை வென்ற ஆனந்தியின் திறமை பாராட்டுக்குரியதே.அதே போல் வசதி இல்லாதவர்கள் கூட திறமையும், தன்னம்பிக்கையும் இருந்தால் மருத்துவர் ஆகலாம் என்பதை ஒருமுறை நிரூபித்து காட்டியுள்ளார் ஆனந்தி.