சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடனுதவி அளிக்கும் வகையில், அக்டோபர் 3-ஆம் தேதி முதல், 400 மாவட்டங்களில் லோன் மேளா நடத்துமாறு, பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். அப்போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, பொதுத்துறை வங்கிகள், நாட்டின் 400 மாவட்டங்களில் லோன் மேளாக்களை நடத்தவுள்ளன. இதில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் வேளாண் துறையினருக்கு, முன்னுரிமை அடிப்படையில் கடன் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது நெருக்கடியில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், ஏற்கெனவே பெற்றுள்ள கடன்களை, வாராக் கடனாகப் பார்க்க வேண்டாம் எனவும், அவற்றை திரும்பப் பெறும் வகையில் ஊக்கமளிக்க வேண்டும் எனவும் வங்கிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறுகிய கால கடன் பாக்கிகளை, 2020 மார்ச் 31-ஆம் தேதி வரை வாராக் கடன்களாக அறிவிக்க வேண்டாம் என்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.