மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் 2ம் நாளாக இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதி ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களிடம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான ஆட்சி மன்ற குழுவினர், நேர்காணலை நடத்தி வருகின்றனர். 20 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு வழங்கியவர்களிடம் நேற்று 2 கட்டங்களாக நேர்காணல் நடத்தப்பட்டது.
மீதமுள்ள, 19 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு வழங்கியவர்களிடம் இரண்டு கட்டங்களாக இன்று நேர்காணல் நடைபெறுகிறது. திருவள்ளூர், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய தொகுதிகளுக்கான நேர்காணல் காலை 10 மணிக்கு துவங்குகிறது. இதேபோல், திருவண்ணாமலை, ஆரணி, திருச்சிரப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய 9 தொகுதிகளின் வேட்பாளருக்கான நேர்காணல் பிற்பகல் 4 மணிக்கு துவங்கி நடைபெறவுள்ளது.