மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மக்களவை தேர்தலை மனதில் வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார். மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரை பேசினார். அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்களால் வேலைவாய்ப்பு பெருகவில்லை என்றும் நாட்டில் முழுமையாக வறுமை ஒழிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். கிராமப்புறங்களில் விவசாய தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவிப்பதாக தெரிவித்த அவர், மக்களவை தேர்தலை மனதில் வைத்துகொண்டே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
ஜிஎஸ்டி வரியால் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஜிஎஸ்டி வரி இழப்பீடாக தமிழக அரசுக்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சீனாவில் இருந்து பட்டாசு இறக்குமதி செய்யப்படுவதால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களவையில் சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.