மக்களவை தேர்தல்: அதிமுக,பாமக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாமக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மக்களவை தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு, தேர்தல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

இந்தநிலையில், சென்னை அடையாறில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக மற்றும் பாமகவினர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். பின்னர், கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று, ஒப்பந்தம் கையெழுத்தானது.

கூட்டணி ஒப்பந்தத்திற்கு பிறகு அதிமுக மற்றும் பாமக தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாமக இணைந்து போட்டியிடும் என்று தெரிவித்தார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 21 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version