இந்திய தேர்தல் வரலாற்றிலேயே தற்போதைய மக்களவை தேர்தலில் தான் அதிக வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேலூர் தொகுதியை தவிர்த்து நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் 67 புள்ளி 11 சதவீத வாக்குகள் பதிவுயுள்ளன. இது 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் ஒப்பிடுகையில் 1 புள்ளி 16 சதவீத வாக்குகள் அதிகமாகும்.
சுதந்திர இந்தியாவில் 1951ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் 45 புள்ளி 67 சதவீத மக்கள் மட்டுமே வாக்களித்தனர்.
தற்போதைய தேர்தலில் அதிகபட்சமாக லட்சத்தீவில் 84 புள்ளி 96 சதவீதமும், குறைந்த பட்சமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 29 புள்ளி 39% சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேசமயம் கடந்த மக்களவை தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 49 புள்ளி 72 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆனால் இந்தமுறை 20 புள்ளி 33 % சதவீத வாக்குகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.