முத்தலாக்கிற்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இஸ்லாம் மதத்தில் மூன்று முறை, தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து, நாடு முழுவதும் சமூக ஆர்வலர்களும், பெண்ணுரிமை அமைப்பினரும் குரல் எழுப்பிவந்தனர். இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான, முந்தைய ஆட்சியில், இஸ்லாம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வந்த நிலையில் மாநிலங்களவையில் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் உடனடி முத்தலாக்கிற்கு தடைவிதிக்கும் மசோதாவை மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். பல்வேறு திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்படும் இந்த மசோதா 303 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு 82 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதாவின்படி, முத்தலாக் கூறி விவாகரத்து பெறும் கணவர்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.