மகாராஷ்டிர அரசியல் விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு

மகாராஷ்டிர அரசியல் தொடர்பாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன.

மகாராஷ்டிரத்தில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது, அஜித் பவாருக்குத் துணை முதலமைச்சர் பதவி அளித்தது ஆகியவை தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரச்சனை எழுப்பினர். அவை அலுவல்களை ஒத்தி வைத்துவிட்டு மகாராஷ்டிர அரசியல் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் இது குறித்து விவாதிக்க முடியாது என அவைத் தலைவர்கள் தெரிவித்து விட்டனர். அதன் பின்னரும் எதிர்க்கட்சியினரின் அமளி தொடர்ந்ததால் மக்களவை நண்பகல் 12 மணி வரையும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டன. 12 மணிக்கு மக்களவை கூடியபோது உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவையை விட்டு வெளியேறிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Exit mobile version