தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில் 268 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22 ஆயிரத்து 546 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் விதமாக மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக மார்ச், ஜூலை, செப்டம்பர் மாதங்களில் நடைபெறாமல் இருந்த லோக் அதாலத், 9 மாதங்களுக்கு பிறகு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை தவிர அனைத்து மாவட்ட, தாலுகா சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கள் மூலம் 354 அமர்வுகளில் 82 ஆயிரத்து 77 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 262 கோடியே 28 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 22 ஆயிரத்து 546 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.