தமிழக காவல்துறையில் ஐபி.எஸ் அதிகாரியாக இருக்கக்கூடிய நபர்கள் சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்ற வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவர், சட்ட ஒழுங்கு டி.ஜி.பிக்கு அடுத்தப்படியாக சென்னை மாநகர காவல் ஆணையர் பதவி பார்க்கப்படுகிறது, மேலும் ஆணையராக பணியாற்றினால் காவல்துறையில் அனைத்து முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் என்று கூறப்படும் அளவுக்கு ஒரு முக்கிய பொறுப்பாக பார்க்கப்படும்.
கடந்த 10 மாதங்களாக 107வது சென்னை காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து வந்த மகேஷ்குமார் அகர்வாலுக்கு பதிலாக தற்போது ஆயுதப்படை ஏடிஜிபி இருந்து வந்த சங்கர் ஜிவாலை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
யார் இந்த சங்கர் ஜிவால்?
1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தவர் சங்கர் ஜிவால்.பின்னர் சேலம்,மதுரை எஸ்பியாக பணியாற்றி வந்த அவர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.மேலும் மத்திய அரசு பணியில் 8 வருடமும்,திருச்சி காவல் ஆணையராகவும்,ஐஜி உளவுத்துறை,ஏடிஜிபி சிறப்பு காவல் படை என முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்து வந்துள்ளார்.இவரது உழைப்பிற்கு பிரதமரின் மெச்சதகுந்த பணிக்கான பதக்கம் உட்பட பல பதக்கங்களை பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு சாதகமாக வரத்தொடங்கியதும் ஐ.பி.எஸ் அதிகாரிகளில் முதல் ஆளாக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியவர் சங்கர் ஜிவால் என்பது குறிப்பிடத்தக்கது…