2 கோடி மதிப்பிலான 1215 கிலோ கஞ்சா அழிப்பு! சென்னை பெருநகர காவல் ஆணையர் அதிரடி!

சென்னை பெருநகர் காவல் ஆணையர் முன்னிலையில், சென்னை காவல்துறையால் கைப்பற்றப்பட்ட 2 கோடி மதிப்பிலான 1215 கிலோ கஞ்சா, மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் நீதிமன்ற ஆணையின் பேரில் எரித்து அழிக்கபட்டன. கடந்த ஒருவருடத்தில் மட்டும் 3 முறை மொத்தம் ரூபாய் 4.5 கோடி மதிப்பிலான 3,135 கிலோ கஞ்சாவானது எரித்து அழிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஓபியம், ஹெராயின், கொக்கையின், மெத்தம்பெட்டமைன், கெட்டமைன் போன்ற கைப்பற்றப் பொருட்களின் ஆபத்து கருதியும், அதனை கைகொள்வதற்கான இடவசதி கருதியும், என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை உரிய முறையில் அழிக்க சென்னை பெருநகர காவல்துறை உரிய நடவடிக்கையினை அவ்வப்போது எடுத்துவருகிறது.

அதன்பேரில் என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் போதைத் தடுப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினரின் மேற்பார்வையின் கீழ் சம்பந்தப்பட்ட புலனாய்வுத் துறை அதிகாரிகள் என்.டி.பி.எஸ் சட்டத்தின் பிரிவு 52அ-விற்கு கீழ் போதைப்பொருட்கள் வழக்குக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களின் புதிய உறுதிமொழி கோப்பு தாக்கல் செய்து, உரிய மாதிரிகள் மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட பின்னர், நிலுவையில் உள்ள 41 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 996.15 கிலோ போதைப் பொருட்களை அழிக்க திட்டமிட்டது. மேலும் போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம் மூலம் 84 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 218.825 கிலோ போதைப் பொருட்களை அழிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி இன்று, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் 125 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1213 கிலோ 685 கிராம் கஞ்சா, 1.25 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் 40 கிலோகிராம்  ஹெராயின் என மொத்தம் 1215 கிலோ போதைப் பொருட்கள் செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள சிஜே மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் மூலம் எரிக்கப்பட்டது. 1000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அழிக்கப்பட்ட இந்த போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாயாகும்.

Exit mobile version