ஒருவார முழுமையான ஊரடங்கின் போது, அத்தியாவசிய அரசுத் துறைகள் மட்டும் இயங்கும் எனவும், தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லையென்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் போது, தனியார் நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை செயல்பட அனுமதி வழங்கப்பட்டன. இந்நிலையில், 24ம் தேதி முதல் ஒருவார காலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள முழுமையான ஊரடங்கில், தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களின் ஊழியர்கள், வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தெழிற்சாலைகள் நீங்கலாக, மற்ற அனைத்து தொழிற்சாலைகளும் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் அவசியமான துறைகள் கொண்ட அலுவலகங்கள் மட்டும் இயங்கும் எனவும், அவசியமற்ற மற்ற துறை அலுவலகங்கள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.