உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எம்.ஜி.ஆர் நகர், கோட்டைமேடு, குளத்துக் காடு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் தங்கமணி மற்றும் வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர் தங்கமணி, பள்ளிபாளையம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, காவிரி குடிநீர் கிடைக்க கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 426 கோடியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சின்னியம்பாளையம், பட்டணம், முத்து கவுண்டன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஈழத்தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டதற்கு திமுகவே காரணம் என்று குற்றம்சாட்டினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். புதுப்பட்டி, மாந்துறை, பள்ளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் பிரசாரம் செய்தார். அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துக் கூறி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நம்பியூர், லாகம்பாளையம், வேம்பாண்டாம்பாளையம், அஞ்சானூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.

கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தண்ணீர் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அமைச்சர் மற்றும் வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர், தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அதிமுக நிறைவேற்றி வருவதாக கூறினார்.

தூத்துக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பிரசாரம் செய்தார். சோட்டையன் தோப்பு, தாளமுத்து நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, உள்ளாட்சித் தேர்தலில் மக்களை சந்திப்பதற்கு திமுகவினருக்கு தைரியம் இல்லை என்றார். தேர்தல் என்றாலே திமுகவினருக்கு காய்ச்சல் வந்துவிடுவதாக என அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பிரசாரம் செய்தார். சவளக்காரன், குடிதாங்கிசேரி, வடகோவனூர், தண்ணீர்குன்னம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அமைச்சருக்கு, பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர் காமராஜ், பொதுமக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தும் அரசாக, அதிமுக அரசு உள்ளதாக கூறினார்.


தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி ஊராட்சியில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது பேசிய அமைச்சர் அன்பழகன், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அதிமுக அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக கூறினார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆனந்த தாண்டவபுரம், மணக்குடி, கோடங்குடி, பட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார்.

இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கவுண்டச்சிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட வானதி சீனிவாசன் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Exit mobile version