உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
சரக்குகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல சாலைப் போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சரக்கு ரயில் போக்குவரத்தும் பெரிய அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த நிலையில் உலகின் மற்ற நாடுகளை போல நதிகள் வழியாக உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக தேசிய நீர்வழிப்பாதை வழியாக கொல்கத்தாவில் இருந்து வாரணாசிக்கு சரக்கு கப்பல் இயக்கப்படுகிறது. கொல்கத்தா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் எனும் உள்நாட்டு கப்பல் நாளை வாரணாசி சென்றடைகிறது.
இந்தக் கப்பலை பிரதமர் மோடி நாளை வரவேற்கிறார். வாரணாசியில் நடைபெறும் விழாவில் கங்கை நதியின் நான்கு கரைகளையும் இணைக்கும் படகு போக்குவரத்து முனையங்களுக்கான திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் குறைந்த செலவில் நீர் வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்க ஜல் மார்க் விகாஸ் என்ற படகு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post