உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மூன்று நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நாளை முதல் மூன்று நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி, 14ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை , கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
15ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் ஆட்சியர்களுடனும், 16ம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். இதன் தொடர்ச்சியாக மத்திய மற்றும் வடக்கு மண்டல ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனையில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.