9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விண்ணப்பிக்கலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் அதிமுகவினர், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில் உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று கூறியுள்ளனர்.
மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு 5ஆயிரம் ரூபாயும், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு 3ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே விருப்பமனு அளித்துள்ளவர்கள், அதற்கான அசல் ரசீது மற்றும் நகலினை சமர்ப்பித்து விருப்ப மனுக்களைப் பெறலாம் என்றும் கூறியுள்ளனர். விருப்ப மனு பெறுவது சம்பந்தமான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட கழக செயலாளர்கள் ஏற்பாடு செய்திடவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.