உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளிக்கலாம்: அதிமுக, திமுக

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அந்தந்த மாவட்டங்களில் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அதிமுக, திமுக கட்சிகள் அறிவித்துள்ளன. விருப்ப மனுக்களுக்கு அதிமுகவை விடத் திமுகவில் கிட்டத்தட்ட இருமடங்கு கட்டணம் நிர்ணயித்திருப்பது கீழ்வரும் ஒப்பீட்டின் மூலம் தெரியவருகிறது.

அதிமுகவில் மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோர் 25 ஆயிரம் ரூபாயும் மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோர் 5 ஆயிரம் ரூபாயும் செலுத்தி விண்ணப்பிக்கலாம். திமுகவில் இதே பதவிகளுக்குப் போட்டியிட விரும்புவோர் இரு மடங்குக் கட்டணமாக முறையே 50 ஆயிரம் ரூபாயும், பத்தாயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நகராட்சித் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுகவில் முறையே 10 ஆயிரம் ரூபாயும், 2 ஆயிரத்து 500 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திமுகலோ இரு மடங்குக்கு அதிகமாக 25 ஆயிரம் ரூபாயும், 5 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாயும் உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திமுகவிலோ 10 ஆயிரம் ரூபாயும், 2 ஆயிரத்து 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாயும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 3 ஆயிரம் ரூபாயும் கட்டணமாகும். இதே பதவிகளுக்கு திமுகவில் முறையே பத்தாயிரம் ரூபாயும் ஐயாயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்துப் பதவிகளுக்குமே அதிமுக நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட திமுக அதிகக் கட்டணம் நிர்ணயித்துத் தொண்டர்களிடம் பணத்தை வசூலிப்பதிலேயே குறியாக உள்ளது தெரியவருகிறது.

Exit mobile version