2006-ம் ஆண்டு, திமுக ஆட்சியில் வன்முறை, கலவரங்களோடு நடந்த உள்ளாட்சித் தேர்தலைப்போல் இல்லாமல், நூற்றுக்கு நூறு சதவிகிதம் நேர்மையான முறையில் தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது என்று மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது. இதில் முறைகேடுகள் நடந்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடந்து கொண்டிருந்த நிலையில், பொறுப்பற்ற முறையில் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்த மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையரையும் நேரில் சந்தித்து தொடர்ந்து புகார் அளித்துக் கொண்டிருந்தார். அதோடு, இரவில் போய் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்தைக் குற்றம்சாட்டி மனுத்தாக்கல் செய்தார்.
திமுக ஆட்சியில், 2006-ஆம் ஆண்டு வன்முறை, கலவரங்களோடு நடந்த உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதுபோல் இல்லாமல், தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக, நேர்மையான முறையில் நடைபெற்றது என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக, தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் பேசிய அவர், நூற்றுக்கு நூறு சதவிகிதம் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டார். அவர்கள் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை பாரபட்சமின்றி கண்காணித்தனர். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதுபோல், மத்திய அரசு நிறுவனங்களைச் சேர்ந்த 6 அலுவலர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர். அதனால், எந்தவிதமான முறைகேடுகளும் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் நடக்கவில்லை என்று தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்தார்.
மேலும், எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீது சொன்ன குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த அவர், எதிர்கட்சிகள் சொன்ன புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த விபரங்கள் சம்பந்தப்பட்ட எதிர்கட்சிகளுக்கும் உடனே தெரிவிக்கப்பட்டுள்ளன என தெளிவுபடுத்தினார். அதுபோல், சர்ச்சைக்குரிய 25 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது என்றும், சுயேட்சை வேட்பாளர்கள் அளித்த 712 புகார்களிலும், தொலைபேசி மூலம் பெறப்பட்ட ஆயிரத்து 82 புகார்களிலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கம் கொடுத்தார்.
வாக்களர் பட்டியலில் குளறுபடிகள் என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை ஆணித்தரமாக மறுத்த தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, இந்தியத் தேர்தல் ஆணையம் கொடுக்கும் வாக்காளர் பட்டியலைத்தான், தமிழக தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிறது. அதனால், அதில் குளறுபடி என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் சொல்லும் ஏற்கமுடியாது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களிலும், நகர்ப்புறங்களிலும் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று உறுதி தெரிவித்த தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, தமிழக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நேர்த்தியாக நியாயமாக தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளது என்று உறுதி கூறினார்.