திமுக ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களில், மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல், அதிமுகவினரை பழிவாங்குவதிலேயே கவனம் செலுத்துவதாக, இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக 9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ளார்.
முதலாவதாக திருப்பத்தூர் சென்ற அவர், மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், சட்டமன்ற தேர்தலின்போது, திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று விமர்சித்தார்.
குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என வாக்குறுதி அளித்த திமுக அதனை நிறைவேற்றியதா என்று கேள்வி எழுப்பினார்.
தேர்தலின்போது நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி என அறிவித்த திமுக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார்.
தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, தேர்தல் நடந்த முடிந்த பின் வேறு பேச்சு என்று திமுக அரசு பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும் சாடினார்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு மக்களுக்கு நன்மை செய்யாமல், அதிமுகவினரை குறிவைத்து பழிவாங்கவே திமுக அரசு சிந்தித்து கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலை பயன்படுத்தி மக்களுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்று கழக நிர்வாகிகளை அவர் அறிவுறுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு சென்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமசந்திரன், அக்ரி கிருஷ்ணகிரி, முக்கூர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.கே.அப்பு, வேலழகன் உட்பட ஏராளாமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்கொத்து மற்றும் சால்வைகள் வழங்கி, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் காட்பாடியில், அதிமுக நிர்வாகிகளுக்கு, கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், திமுகவினர் தேர்தலுக்கு முன்பு 525 அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, எதையும் நிறைவேற்றவில்லை என விமர்சித்தார்.
தேர்தலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக ஒரு தோற்றத்தை திமுக உருவாக்கி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
தில்லுமுல்லு செய்வதில் வல்லவர்கள் திமுகவினர் என விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர், விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என அறிவித்துவிட்டு, அதில் விவசாயிகளுக்கான எந்த நலத்திட்டமும் அறிவிக்கப்படவில்லை என விமர்சித்தார்.
அதிமுக ஆட்சியின்போது, மகளிர் நலனுக்காக செயல்படுத்தப்பட்ட அம்மா இருசக்கர வாகனம் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை முடக்க திமுக முயற்சிப்பதாக விமர்சனம் செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சென்ற இணை ஒருங்கிணைப்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய பேசிய அவர், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் தற்போது திமுகவில் அமைச்சர்களாக இருப்பதாகவும், திமுகவில் ஆள் இல்லாததால் வாடகைக்கு ஆள்பிடித்து திமுக கட்சி நடத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
4-மாத திமுக ஆட்சியில், கொலை, கொள்ளை, வழிப்பறி என சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், குட்கா மற்றும் போதைப் பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
விவசாயிகள் நெல்மணிகளை உற்பத்தி செய்ய மிகவும் கஷ்டப்படுவதாகத் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை கொள்முதல் செய்யாமல் அவர்களை திமுக அரசு வஞ்சித்து வருவதாக விமர்சித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், மூன்று ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு அதிமுகவினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை குறிப்பிட்ட எதிர்க்கட்சி தலைவர் முழு வெற்றியின் அடையாளம் என பெருமிதம் தெரிவித்தார்.