ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிப்காட் அரசினர் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில், திமுகவினரின் அத்துமீறலை கண்டித்த அதிமுகவினரை, திமுகவினர் தாக்க முயற்சித்ததால் பரபரப்பு நிலவியது.
ஐந்தாயிரம் பகுதி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சேஷா வெங்கட் தலைமையிலான திமுகவினர்,
சிப்காட் அரசினர் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண் 92ல், ஜன்னல் வழியாக திமுக தேர்தல் சின்னத்தையும், பதாகையையும் காட்டி வாக்காளர்களிடம் வாக்கு அளிக்குமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது.
திமுகவினரின் இந்த தேர்தல் விதிமீறல் குறித்து பழனி தலைமையிலான அதிமுகவினர், தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவினர், அதிமுகவினரை தாக்க முயன்றனர். பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்த நிலையில், அவர்களையும் தள்ளியபடி திமுகவினர் முன்னேறியதால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து இருதரப்பினரையும், வாக்குச்சாவடி வளாகத்துக்கு வெளியே காவலர்கள் அனுப்பி வைத்தனர்.
இதனிடையே தள்ளுமுள்ளு குறித்த தகவலின் பேரில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்யன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் ஆகியோர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியினை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.