வசதி படைத்தவர்களின் குழந்தைகள் மட்டுமே LKG, UKG வகுப்புகளில் சேரமுடியும் என்ற நிலையை மாற்றி, ஏழை குழந்தைகளும் அரசு பள்ளிகளில் LKG UKG வகுப்புகளில் சேர்ந்து கற்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறது தமிழக அரசு.தமிழகத்திலேயே முதல் முறையாக அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி யூ.கே.ஜி வகுப்புகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் அங்கன்வாடி மையத்தில் எல்.கே.ஜி யூ.கே.ஜி படிப்பிற்கான புதிய வகுப்பறைகளை முதலமைச்சர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
பள்ளிக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் மழலைகளுக்கு ஆரம்பமே கலர் ஃபுல்லாக இருக்க வேண்டும் என்று, அவர்களை ஈர்க்கும் வகையில் பல வண்ணங்களில் வகுப்பறைகள்
அமைக்கப்பட்டுள்ளன.அவர்கள் பயன்படுத்தும் கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள், காலணி, டை உள்ளிட்டவை அனைத்தும் இலவசமாக தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு
அமைந்துள்ளதால் குழந்தைகளின் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
குழந்தைகளுக்காக அரசுப் பள்ளிகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வகுப்புகள் மூலம் குழந்தைகள் தன்னிச்சையாக செயல்படும் அளவிற்கு செய்முறை பாடங்கள் கற்பிக்கப்படும் என்றும் இதன் மூலம் மாணவர்கள் குழந்தை பருவத்திலேயே நல்ல முறையில் வளர்வதனை கற்று கொள்வார்கள் என்றும், குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும்போது தாங்களும் குழந்தைகளாகவே மாறிவிடுவதாகவும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையுடன் இணைந்து தமிழகத்திலுள்ள 2 ஆயிரத்து 381அங்கன்வாடி மையங்களில் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த வகுப்புகள் வரும் கல்வி ஆண்டு முதல் முழுவீச்சில் நடத்தப்படவுள்ளது.
பணம் படைத்தவர்களின் குழந்தைகள் மட்டுமே எல்.கே.ஜி யூ.கே.ஜி வகுப்புகளில் காலடி வைக்கமுடியும் என்ற நிலையை மாற்றி ஏழைக் குழந்தைகளுக்கும் அவை கிடைக்கும் வண்ணம் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.