தமிழகத்தில் முதன்முறையாக தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்புகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி முதன்முறையாக தருமபுரி மாவட்டம் பாப்பராப்பட்டியில் எல்.கே.ஜி வகுப்புகளை அமைச்சர் கே.பி அன்பழகன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் 83 அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அங்கன்வாடி மையத்துடன் இணைந்து எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் காலை முதலே பள்ளிக்கு வந்து ஆர்வமுடன் பள்ளியில் சேர்த்தனர்.
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதை பெற்றோர்களுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் எல்கேஜி பாட வகுப்புகள் துவங்கப்பட்டதற்கு வரவேற்பு அளிக்கும் பெற்றோர்கள் இதனை ஏற்படுத்திக்கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியினை தெரிவித்துள்ளனர்.