அரியலூரில், தமிழக அரசின் அங்கன்வாடி மையங்களில், எல்கேஜி, யூகேஜி, வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், ஆங்கிலக்கல்வி, சீருடை ஆகியவற்றால் ஈர்க்கப்படும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எல்கேஜி, யூகேஜி, வகுப்புகளில் பல்லாயிரம் ரூபாய்களை செலவழித்து வருகின்றனர். இதனால் அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதை குறைத்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது தமிழக அரசு அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையங்களில் மாண்டிசரி முறையில் எல்கேஜி, யூகேஜி, வகுப்புகளை இவ்வருடம் முதல் அரசு தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் எல்கேஜி, யூகேஜி, வகுப்புகள் தொடங்கப்பட்டன. அரியலூர் மாவட்டத்தில் சுமார் 26பள்ளிகளில் முதல்கட்டமாக இவ்வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமுடன் வருகை தருகின்றனர். மேலும், நவீன கற்பிக்கும் உபகரணங்கள், விளையாட்டு பொருள்கள், ஆகியவை பெற்றோர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இங்கு சேர்க்கப்படும் குழந்தைகளின் கல்வியில் மட்டுமல்லாது அவர்களது உடல் நலன் மற்றும் ஆரோக்கியம் குறித்தும் அங்கன்வாடி பணியாளர்கள் அக்கரையோடு குறிப்பெடுத்து நிவர்த்தி செய்து தருகின்றனர். ஆங்கில கல்வி பயில்விப்பதற்காக தமிழக அரசு தகுதிவாய்ந்த சிறப்பாசிரியர்கள் நியமித்து தரமான கல்வியினை பயிற்றுவிக்கின்றனர். இதனால் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி, வகுப்புகளின் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. தரமான கல்வியை தரமுடியும் என்று ஆசிரியர்களும், தனியார் பள்ளிகளில் பெரும் செலவு செய்து பெரும் கல்வி தற்போது அரசுப்பள்ளிகளில் செலவில்லாமல் கிடைப்பதால் மகிழ்ச்சியில் பெற்றோரும் உள்ளனர்.