சேலம் மாவட்டம் தலைவாசலில் அமையவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்காவிற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ரூபாய் 1.87கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தலைவாசலில் ஆசியாவிலேயே பெரிய நவீன கால்நடைப் பூங்கா 396 கோடி ரூபாயில் நிறுவப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது குறித்து சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், பேசிய முதலமைச்சர்,900 ஏக்கர் பரப்பில் உலகத் தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த நவீன கால்நடைப் பூங்கா அமைக்கப்படும் என்று கூறினார். மூன்று பிரிவுகளாக அமையவுள்ள இப்பூங்காவின் முதல் பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டும் கறவை மாட்டுப்பண்ணை, நாட்டு மாடுகளின் இனப்பெருக்க பண்ணை ஆகியவை அமையவுள்ளன. இதற்காக வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர், கால்நடை தொடர்பான தொழில் நுட்பங்களை கேட்டறிந்தார். இந்த நிலையில், தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் துணை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கால்நடைத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கால்நடைப் பண்ணை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக 1.87கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.