சொப்பு சாமானில் அறுசுவை உணவு சமைத்து அசத்தும் சிறுமிகள்

சொப்பு சாமானில் சோறு சமைத்து விளையாடும் குழந்தைகளுக்கு மத்தியில் சொப்பு சாமானில் அறுசுவை உணவு சமைத்து அசத்தி வருகிறார்கள் மதுரையை சேர்ந்த இரு சிறுமிகள். யார் அவர்கள் தற்போது பார்ப்போம்…

 

கொரோனா பரவல் காரணமாக குழந்தைகள் அனைவரும் ஒன்றரை ஆண்டுகளாக வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். பள்ளிகளும் இல்லை. வெளியிலும் செல்ல முடியாது.

வீட்டில் உட்கார்ந்து ஆன்லைன் கேமில் பொழுதை கழிக்கலாம் என்றால் அதுவும் சலித்து போய் விட்டது.

இந்நிலையில் தான் மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி-ஸ்ரீமுகி குட்டி சகோதரிகள் சொப்பு சாமானில், விளையாட்டாக சமைக்க போய் தற்போது விருந்து வைக்கும் அளவிற்கு வந்திருக்கிறார்கள்.

தாய் சமையல் வேலையில் இருக்கும் போது தொந்தரவு செய்து கொண்டே இருந்ததால் சொப்பு சாமான் வாங்கி குழந்தைகளிடம் விளையாட கொடுத்துள்ளனர்.

ஆனால் அதனை பெற்ற குழந்தைகள், அதில் தீ மூட்டி சமைக்க வேண்டும் என கூறி வீட்டை இரண்டாக்க தொடங்கியுள்ளனர்.

குழந்தைகளின் குடைச்சலை பொறுக்க முடியாத பெற்றோர், வேறு வழியின்றி அவர்களின் ஆசையை நிறைவேற்றி தந்தனர்.

தற்போது சாம்பார்சாதம், சைவ பிரியாணி, குளோப்ஜாமுன், கோதுமை அல்வா, வாழைப்பூ வடை என அறுசுவையையும் சமைத்து அசத்தி வருகின்றனர்.

சிறிய அடுப்பில், சிறு விறகுகளை அடுக்கி, சிறு வாணலியில் சமைத்து, அதனை சிறிய தட்டில் சின்னஞ்சிறு கரங்கள் பரிமாறும் அழகை பார்க்கையில் பெற்றோர் உட்பட அனைவருமே சொக்கித்தான் போகிறார்கள்.

எதிர் கால தலைமுறையினர் இணையத்தில் பொழுது தொலைத்து கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற சொப்பில் புழங்கும் குழந்தைகள் பண்பாட்டை மீட்கும் நம்பிக்கை கீற்றாக நம் கண்முன் நிற்கிறார்கள்.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக மதுரையில் இருந்து ஒளிப்பதிவாளர் சேரனுடன் செய்தியாளர் நவநீதகிருஷ்ணன்…

Exit mobile version