சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்களை பதிவிடுபவர்கள் பட்டியல்

சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களின் பட்டியலை, தமிழகம் முழுவதும் சேகரித்து  அறிக்கை அளிக்க, சைபர் கிரைமுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி ஒருவரை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சனம் செய்ததாக மருதாச்சலம் என்பவர் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி,சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சனம் செய்யும் நபர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக காவல்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டருந்தார்.

இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சைபர் கிரைம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது , நடவடிக்கை எடுப்பதற்காக, எந்த விதமான நடைமுறைகளை வகுத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினர். மேலும் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களின் பட்டியலை, தமிழகம் முழுவதும் சேகரித்து  அறிக்கை அளிக்க சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 29 ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version