டாஸ்மாக் கடைகளை மது பிரியர்கள் 'ஈ' போன்று மொய்த்தனர்

தமிழ்நாட்டில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளை மது பிரியர்கள் ஈ போன்று மொய்த்தனர். இதனால் அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

தமிழகத்தில் நாளை முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முழு ஊரடங்கு நாட்களில் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தேனி மாவட்டத்தில் உள்ள 93 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. இருவாரங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை மூட்டை, மூட்டையாக வாங்கிச் சென்றனர். இருசக்கர வாகனங்களும், கார்களும் டாஸ்மாக் கடைகளின் முன்பாக வரிசைகட்டி நிற்கின்றன. 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் உள்ள 8 டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் மது வாங்க முண்டியடித்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் மது வாங்குவதிலேயே குறியாக இருந்ததால் அங்கு தொற்று பரவும் அபாயம் உருவானது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள மதுக்கடையில், தொற்று அபாயத்தை சிறிதும் பொருட்படுத்தாத மதுப்பிரியர்கள், மளிகை சாமான்கள் வாங்குவது போன்று, மதுபாட்டிகளை வாங்கிச் சென்றனர். முழு ஊரடங்கு நாளை அமலாகும் நிலையில், மூட்டை, மூட்டையாக மது வாங்குவதில் அவர்கள் ஆர்வம் காட்டினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், டாஸ்மாக் கடையில் மதுப் பிரியர்கள் கூட்டம் கூட்டமாக மதுக்களை வாங்கி சென்றனர். மது வாங்க வரும் மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்ததால் அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

முழு ஊரடங்கு நாட்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அரசு அறிவித்துள்ளதால், நாமக்கலில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் குவிந்தனர். மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு, மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்த நிலையில்
அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு மது பிரியர்கள் வாங்குவதே குறியாக இருந்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள அரசு மதுபான கடைகளில், நீண்ட வரிசையில் காத்துக்கிடந்த மதுபிரியர்கள் பெரிய பைகளில் மதுபாட்டில்களை அள்ளிச் சென்றனர். இதனால் குறுகிய காலத்தில் கொரோனா தொற்று உச்சம் அடைந்து விடும் என்பது சமூக ஆர்வலர்களின் குமுறலாக உள்ளது.

கோவையில் எலைட் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலை மோதியது. லட்சுமி மில்ஸ், ஆவாரம்பாளையம் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுக்களை வாங்கி சென்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகளில் கூடாத கூட்டம் மதுபான கடையில் வரிசையில் நிற்பவர்களை பார்த்து பலரும் ஆச்சிரியத்துடன் கடந்து சென்றனர்.

Exit mobile version