தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுப்பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு கூடியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் மடத்துக்குளம், உடுமலை உள்ளிட்ட இடங்களை சேர்ந்த மதுப்பிரியர்கள் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள மதுக்கடைகளுக்கு படையெடுத்தனர். மதுப்பிரியர்களை கட்டுப்படுத்துவதற்காக கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக மதுப்பிரியர்கள் குடையுடன் டாஸ்மாக் கடையில் நின்றனர். இருப்பினும் மதுப்பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு மதுபானங்களை வாங்க முயன்றதால் நோய் பரவும் அபாயம் உருவானது.
திருப்பூர், கரூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால், அருகே உள்ள ஒட்டன்சத்திரம் டாஸ்மாக் கடைகளில், மதுப்பிரியர்கள் ஏராளமானோர் குவிந்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர். பாதுகாப்பான இடைவெளி இல்லாமல் நீண்ட வரிசையில் நின்றதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகள் திறக்கப்படாததால், தருமபுரி – சேலம் மாவட்ட எல்லையான தொப்பூர் மற்றும் பாளையம் புதூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓமலூர், தீவட்டிப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மதுப்பிரியர்கள் இருசக்கர வாகனம், கார் மற்றும் ஆட்டோக்கள் மூலம் வந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அண்ணாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். அப்போது பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் மதுப்பிரியர்கள் கூடியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.